ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமெரிக்காவின் தற்போதைய வரி விதிப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட காலணிகள் தேக்கமடைந்து, சிறு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் அபாயம் உருவாகி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 1971-ம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் காலணி மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கு, உதவியாக பல சிறு தொழில் நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தோல் சார்ந்த பொருட்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, காலணிகள் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலமாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீதம் வரி விதிப்பால் தோல் தொழிற்சாலைகள் மிகுந்த இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.