சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7 ம் தேதி முதல் தொடங்கும். ஏப்ரல் 17ம் தேதி வரை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
The post அமைச்சர் பொன்முடி விடுதலையை எதிர்த்த வழக்கு ஏப்ரல் 7 முதல் இறுதி விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு appeared first on Dinakaran.