சென்னை: "கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா?" என முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
தி.மு.க. செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.12.2024) காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம்: பல நேரங்களில் பல கூட்டங்களில் உங்களை நான் சந்தித்திருந்தாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களில் ஒருவனான என்னுடைய கட்டளையை ஏற்று நாற்பதுக்கு நாற்பதிலும் வெற்றியைப் பெற்றுத் தந்த உடன்பிறப்புகளான உங்களை இந்த செயற்குழுக் கூட்டத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.