பெங்களூரு: டாக்டர் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அமித் ஷா பேசிய போது, அம்பேத்கரின் பெயரை உச்சரித்ததற்குப் பதிலாக கடவுளின் பெயரை கூறி இருந்தாலாவது முக்தி கிடைத்திருக்கும் என்ற பேச்சுக்கு சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெலகவலியில் உள்ள சுவர்ண விதான் சவுதா அருகே செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வரிடம் அமித் ஷா பேச்சின் பின்னணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டி.கே. சிவகுமார், "அம்பேத்கரும், அரசியலமைப்பும் அன்றி யார் நமக்கு அடித்தளம் அமைத்து தந்திருக்க முடியும். அம்பேத்கர் நமக்கு அரசியலமைப்பைத் தந்தார். அவரை கவுரவிப்பது நமது கடமை." என்று தெரிவித்தார்.