சேலம்: சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த போது, போலீசாருடன் பாஜவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். போலீஸ் உதவி கமிஷனர் மீது பைப், செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழாவையொட்டி, சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் நேற்று மாலை அணிவித்தனர். இதில், பாஜ சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த, மரவனேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.
சிலையின் முன்பகுதிக்கு வந்தபோது, மேலே சிலைக்கு மாலை அணிவித்து கொண்டிருந்த தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தினர், திடீரென பாஜ, ஆர்எஸ்எஸ்.,க்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் கீழே நின்றிருந்த பாஜகவினர் அவர்களை அடிக்க பாய்ந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையிலான போலீசார், மோதலை தவிர்ப்பதற்காக பாஜவினரை படிக்கட்டு பகுதிக்கு ஏறவிடாமல் தடுத்தனர்.
மேலும் கோஷங்கள் எழுப்பிய இளைஞர் இயக்கத்தினரை, சிலையின் பின்பக்கம் வழியாக அனுப்பினர். அந்த நேரத்தில் பாஜவினர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்து ஒருவர் கொடி கட்டியிருந்த பைப்பை தூக்கி வீசி ஏறிந்தார். அது உதவி கமிஷனர் அஸ்வினி மீது விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில், கூட்டத்தில் இருந்து மற்றொருவர் செருப்பை கழற்றி வீசினார். அது போலீசார் மீது விழுந்தது. பின்னர் பாஜவினர் சிலர், அவ்வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அறப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது சேலத்தில் போலீசாருடன் பாஜவினர் தள்ளுமுள்ளு: உதவி கமிஷனர் மீது பைப், செருப்பு வீச்சால் பரபரப்பு appeared first on Dinakaran.