கேள்வி நேரத்தின் போது சுகாதாரத்துறை சம்பந்தமான கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார். அப்போது துணை கேள்வி எழுப்பி அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி(அதிமுக) பேச சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது அவர், ‘‘கேள்வி கேட்பதற்காக கை தூக்கி, கை தூக்கி கையே வலிக்கிறது’’ என்றார்.
உடனே சபாநாயகர் அப்பாவு, ‘‘இல்லை, இப்படி எல்லாம் பேசக்கூடாது. கை சுகமானதற்கு பிறகு நான் கூப்பிடுகிறேன். கை சுகமாகட்டும். உட்காருங்கள்’’ என்று கூறி அடுத்த உறுப்பினரை பேச அழைத்தார்.
அவை முன்னவர் துரைமுருகன்: உறுப்பினர்கள் கேள்வி நேரத்திலே துணை கேள்வி கேட்பதில் தவறில்லை. அதற்காகத்தான் கேள்வி நேரம் வைத்திருக்கிறோம். ஆனால், சில நேரங்களில் நீங்கள் எப்படி கொடுப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். எதிர்க்கட்சியில் இருக்கிற நண்பர்களுக்கு அதிகமான கேள்விகள் கொடுங்கள் என்று நானேகூட சொல்லி இருக்கிறேன். ஆனால், அதற்காக ஒவ்வொருவரும் எழுந்து நின்று உங்களை நையாண்டி செய்வது மரபல்ல. இது இன்றைக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், உட்கார்ந்திருக்கிற இடம், மாண்பை காக்கின்ற இடம். நையாண்டி செய்யக்கூடாது. வேண்டும் என்றால் கேள்வி கேட்கலாம்.
சபாநாயகர் அப்பாவு: அதே உறுப்பினருக்கு 3 துணைக் கேள்வி கொடுத்திருக்கிறேன். 3 மெயின் கேள்வி கொடுத்து அதில் 6 கேள்வி கேட்டிருக்கிறார். மொத்தம் 9 கேள்வி கேட்டிருக்கிறார். உங்களுடைய கட்சியிலே உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஒரேயொரு கேள்வி, இதுவரை கேட்கவில்லை. இன்றைக்குத்தான் ஒரு துணைக் கேள்வி கொடுத்திருக்கிறேன். அது என்னுடைய உரிமை. நான் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த ஆட்சி. அதைத்தான் சபாநாயகரும் கடைபிடித்து எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
* பேரவையில் நாளை போலீஸ் மானியம்
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஞாயிறு) விடுமுறையாகும். நாளை (திங்கள்) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காங்கிரஸ், பாமக, பாஜ, விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட். உள்ளிட்ட முன்வரிசை தலைவர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு நாளை மறுதினம் (செவ்வாய்) மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசி, காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கான அறிவிப்புகளை வெளியிடுவார்.
The post அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ பேச்சுக்கு சபாநாயகர் கண்டிப்பு: நையாண்டி செய்யக்கூடாது என அவை முன்னவர் வேண்டுகோள் appeared first on Dinakaran.