அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு இன்று(7ம் தேதி) வீரர்கள் அணிவகுப்பு மற்றும் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு வந்தார்.
பின்னர், அங்கிருந்து காரில் தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை மையத்திற்கு சென்றார். அங்கு, இரவு தங்கி ஓய்வெடுத்த அவர், இன்று காலை 8 மணியளவில் நடைபெறும் உதய தினவிழாவில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் மீண்டும் காரில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்திற்கு வந்து அங்கிருந்து தனி விமானத்தில் பெங்களூரு செல்வார். அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post அரக்கோணம் வந்தார் அமித்ஷா appeared first on Dinakaran.