சென்னை: அரசியலமைப்பை போற்றும் வகையில் சென்னையில் காங்கிரசார் சார்பில் நேற்று பாதயாத்திரை நடந்தது. இந்திய குடியரசின் 76வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் பிரசாரத்தை முன்னிலைப்படுத்துகிற வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது. ெசன்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகிலிருந்து மகாத்மா காந்தி, அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பை போற்றுகின்ற வகையில் பதாகைகளுடன், தேசியக் கொடிகளை ஏந்தி காங்கிரசார் பாதயாத்திரையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவன் வரை யாத்திரை நடந்தது. யாத்திரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், காண்டீபன், பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், டில்லி பாபு, முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன், எஸ்சி துறை மாநில பொதுச் செயலாளர் மா.வே.மலையராஜா, கலை பிரிவு செயலாளர் சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில்,”வேங்கைவயல் விவகாரத்தில், புகார் கொடுக்க சென்ற நிரபராதிகளே குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையை நாங்கள் கேட்கவில்லை. தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். எங்கையோ தவறு நடந்திருக்கிறது” என்றார். இதையடுத்து, சத்தியமூர்த்திபவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேசியக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். காங்கிரஸ் சேவா தள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
The post அரசியலமைப்பை போற்றும் வகையில் சென்னையில் காங்கிரசார் பாதயாத்திரை: செல்வப்பெருந்தகை தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.