சென்னை: “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி குழும நிறுவனங்களின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டில் அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சாரத்தை அதீத விலைக்கு கொள்முதல் செய்ய மாநில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து அமெரிக்க குடிமக்களிடம் நிதி திரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.