எல்லோராலும் "அண்ணா" என்று அன்போடு அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரைக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. அவர் வாழ்க்கை சமூக வாழ்க்கைதான். சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் அண்ணாவின் அரசியல் சமூக கொள்கை அவரது நடவடிக்கை அவரது வழிநடத்தல் தமிழகத்தின் தலைவிதியை இன்றுவரை அதுதான் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது.. வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
முதலாம் வகுப்பு முதல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் வரை பச்சையப்பன் கல்விக் கூட பேராசிரியர்களின் தத்துப்பிள்ளையாக இருந்தவர்தான் அண்ணா. 1935-ல் பெரியார், அண்ணா சந்திப்பு நடந்தது. திருப்பூரில் நடந்த மாநாட்டில் அண்ணாவின் பேச்சு பெரியாரைக் கவர்ந்தது. பெரியார் அண்ணாவை பார்த்து "என்ன செய்கிறாய் ? "என்று கேட்டார். அதற்கு அண்ணா "படிக்கிறேன்.. பரீட்சை எழுதி இருக்கிறேன்" என்று பதில் சொன்னார்.