திருச்சி: அரசுக்கு பல லட்சம் இழப்பீடு ஏற்படுத்தி, போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த சார்-பதிவாளர் உள்பட 7 பேர் மீது திருச்சி லஞ்சஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட சார் பதிவாளராக முரளி (52) என்பவர், கடந்த 31.08.2021 முதல் 5.7.2023 வரை பணியாற்றி வந்தார். (தற்போது இவர் காஞ்சிபுரம் சார்பதிவாளராக உள்ளார்) இவரது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், மாவட்ட நகர் ஊரமைப்பின் மூலம் வரன்முறை செய்யப்பட்ட நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள், 408 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில், ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியமும் அடங்கும். அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு திருச்சி மாவட்ட உள்ளூர் திட்டக்குழுமத்தில் இருந்து வழங்கப்படும் (principle order/ Frame work order) அடிப்படையில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரால், மனை வரன்முறை கோரி வரும் மனுதாரர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மனுதாரர்களிடம் இருந்து கூராய்வு கட்டணம், வரன்முறை கட்டணம், வளர்ச்சி கட்டணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மனைகள் வரன்முறை செய்து, அரசு உத்தரவுப்படி வட்டார வளர்ச்சி அலுவலரால் செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட மனைகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டும் என அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சிஅலுவலரால் சம்பந்தப்பட்ட சார்பதிவகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக, திருச்சி (இணை-111) சார் பதிவகத்திற்கும் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில், முகமது சலீம் என்பவருக்கு சொந்தமான கம்பரசம்பேட்டை கிராமத்தில் உள்ள 4,730 சதுர அடிகள் கொண்ட சொத்தில் 630 சதுர அடி கொண்ட காலிமனைக்கு அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரால் வரன்முறை கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணம் செலுத்தாமலேயே செலுத்தியதாக போலியாக ஆவணம் தயார் செய்து, இணை சார்பதிவகத்தில் கோபி என்பவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரன்முறை கட்டணம் ரூ.2655 மற்றும் வளர்ச்சி கட்டணம் ரூ.1475 ஆக ரூ.4130 மதிப்பில் அரசிற்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சையது அமானுல்லாவிற்கு சொந்தமான கம்பரசம்பேட்டை கிராமத்தில் 9997.02 சதுர அடி கொண்ட சொத்தில் 1321 சதுர அடி கொண்ட காலிமனைக்கு அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி பரமசிவம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரன்முறை கட்டணம் ரூ.5850 மற்றும் வளர்ச்சி கட்டணம் ரூ.3250 ஆக ரூ.9100 மதிப்பில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கூட்டுசதி செய்து, அரசு ஸ்டாம்புகளை போல் போலியாக ஸ்டாம்புகளையும், போலி முத்திரைகளையும் தயார் செய்து, மோசடியான போலியான ஆவணங்களை தயார் செய்து அவற்றை உண்மையான ஆவணங்களை போல் பயன்படுத்தியுள்ளனர்.
முக்கியமாக, போலியான ஆவணங்கள் என்பது தெரிந்தே பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.2,13,405 நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தொடர்ந்து, நடத்திய விசாரணையில், சார்பதிவாளர் முரளி சிலருடன் சேர்ந்து கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும், போலியான ஆவணங்கள் என்பது தெரிந்தும் பத்திரப்பதிவு செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சார் பதிவாளர் முரளி, ஆவண எழுத்தர்கள் சக்திவேல், திருச்சி தென்னூரை சேர்ந்த ைசயது அமானுல்லா, மேலசிந்தாமணியை சேர்ந்த முகமது சலீம், பாலக்கரையை சேர்ந்த முகமது உவைஸ் உள்பட 7 பேர் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசுக்கு பல லட்சம் இழப்பீடு ஏற்படுத்தி போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு காஞ்சி சார்பதிவாளர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.