புதுடெல்லி: அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
மக்களவையில் எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில், "அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கான கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை" என்று ஜிதேந்திர சிங் கூறினார். அரசு ஊழியர் சங்கம் அல்லது அமைப்புகள் ஏதேனும் ஓய்வூதிய வயதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கோரியதா என்று கேள்விக்கு, "தேசிய கவுன்சிலின் (Joint Consultative machinery) ஊழியர்கள் தரப்பிலிருந்து முறையான கோரிக்கை எதுவும் பெறப்படவில்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.