சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பணப்பலன் நடைமுறையை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., டி.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரன் (தளி தொகுதி) பேசியது: “நிதிப் பகிர்வில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து அதிக வரி வருவாய் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை.