அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நிர்வாகத்தின் தூண்கள், அரசின் கரங்களாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். தேசிய அளவில் தமிழகம் பல்வேறு வகையில் முதல் இடத்திலும், முன்னோடி மாநிலமாகவும் திகழ்வதற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உழைப்பு, சீரிய பங்களிப்பும் மிக முக்கிய காரணம். எனவே, அவர்களது நலன் கருதி தற்போது அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.