சென்னை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைப்பது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல் என்று திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக-வின் தேர்தல் அறிக்கை எண் 309-ல் “ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலன்” என்ற தலைப்பின்கீழ் ‘புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 44 மாதங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.