சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004 ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், மாநில அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.