டெல்லி : அரசுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் நடவடிக்கைகள் இந்தியாவில் வேகமெடுத்துள்ளன. ஏஐ அடிப்படையிலான சேவைகளுக்கான மென்பொருள் நிறுவனங்களிடம் இருந்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் டெண்டர்களை கோரியிருக்கின்றன. மக்களின் குறைகளை தீர்க்கவும் நல திட்டங்களுக்கான அலுவல்களை மேம்படுத்தவும் வேகமாகவும் திறமையாக பணிகளை கையாளவும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்த ஒன்றிய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன.
உரையாடல் சாட்போட்டுகள், வீடியோ பகுப்பாய்வு, தரவு பகுப்பாய்வு உள்ளிட்டவைகளில் ஏஐ நுட்பத்தை செயல்படுத்த தொழில்நுட்ப நிறுவனங்களை ஒன்றிய அரசும் சில மாநில அரசுகளும் நாடி வருகின்றன. குறிப்பாக மின் இணைப்புகள், இணைப்பு செயல் இழப்புகள் மற்றும் பில்லிங் தகராறுகள் குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க ஒன்றிய மின் அமைச்சகம் ஜோதி என்ற சாட்போட்டை உருவாகி வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் my scheme தளத்தை இயக்க ஏஐ சாட்போட்டை நாடி உள்ளது.
மக்கள் பல்வேறு சமூக நலம் மற்றும் மக்கள் நல திட்டங்களை கண்டறிந்து விண்ணப்பிக்க இது உதவும். தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தனது மொழிபெயர்ப்பு மற்றும் குரல் சேவைகளில் அதிக அளவில் ஏஐ நுட்பத்தை பயன்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. மோசடி பகுபாய்வுகளுக்கு ஏஐ நுட்பத்தை சிபிஐ திட்டமிட்டு இருக்கும் நிலையில், கர்நாடக அரசு சாலை பாதுகாப்பிற்கு ஏஐ அடிப்படையிலான அமைப்புகளை செயல்படுத்த முயன்று வருகிறது. ஒடிசா அரசும் மனித – வனவிலங்கு மோதலை தடுக்கும் நோக்கும் ஏஐ அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு மென்பொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இப்படியாக பல்வேறு ஒன்றிய, மாநில அரசு துறைகளில் 13க்கும் மேற்பட்ட திட்டங்களில் ஏஐ அடிப்படையிலான நுட்பத்தை பயன்படுத்த அரசுகள் டெண்டர் கோரியுள்ளன.
The post அரசு துறைகளில் 13க்கும் மேற்பட்ட திட்டங்களில் ஏஐ நுட்பத்தை புகுத்தும் ஒன்றிய, மாநில அரசுகள் : டெண்டர் கோரியது!! appeared first on Dinakaran.