சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) படித்து முடித்த மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கேட்டுக் கொண்டார். அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுடனான ஆய்வு கூட்டம் கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களில் 90% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது 100% வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடமும் அமைச்சர் சி.வி.கணேசன் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில், அரசு பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களுக்கு ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட அகில இந்திய தொழிற்தேர்வில், கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் 26 முதல்வர்களை பாராட்டி அமைச்சர் சி.வி.கணேசன் விருதுகள் வழங்கினார்.
மேலும், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 43 நிறுவனத்திரும், 950 வேலை நாடுநர்களும் கலந்து கொண்டனர். இதில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து முடித்த மாணவர்கள் 100% வேலைவாய்ப்பு பெற வேண்டும்: ஐடிஐ முதல்வர்களுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு appeared first on Dinakaran.