வாஷிங்டன்: டிரம்பின் அரசு நிர்வாக கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘50501’ என்ற போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து 50 இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின்னர், அரசு நிர்வாகத்தில் அவர் எடுக்கும் கொள்கை முடிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக புலம்பெயர்ந்தோர் விவகாரம், அரசுத்துறை மறுசீரமைப்பு, எலான் மஸ்கின் திட்டங்களுக்கு எதிர்ப்பு, சர்வதேச நாடுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு, கல்வி, சமூக பாதுகாப்பு, மற்றும் பொது சுகாதாரத்திற்கான நிதி குறைப்பு போன்ற விவகாரங்களுக்கு எதிராக அமெரிக்காவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக ‘Hands Off’ என்ற முழக்கத்துடன் சமீபத்தில் நடந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக ‘50501’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று முதல் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும், வாஷிங்டன், நியூயார்க், பிலடெல்பியா, மியாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், டிரம்பின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குரல்களை எழுப்பினர். சமூக ஊடகங்களில் டிரம்பிற்கு எதிரான போராட்டங்கள் குறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி 1,400 இடங்களில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களின் தொடர்ச்சியாக, தற்போது ‘50501’ (50 போராட்டங்கள், 50 மாநிலங்கள், ஒரு நாள்) என்ற போராட்டக் குழுவின் சார்பில் 50 மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் பங்குச் சந்தைகள் சரிவடைந்து, $5.4 டிரில்லியன் மதிப்பை இழந்தன. இதனால் பணவீக்கம் அதிகரித்தது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், ‘போராட்டங்களால் டிரம்பை நிர்வாக நடவடிக்கையை தடுக்க முடியாது. அவர் மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்’ என்று கூறினார். டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக 170க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பல உத்தரவுகளுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. எனவே டிரம்பிற்கு எதிரான இன்றைய போராட்டங்களானது, அவரது நிர்வாகத்தின் பொருளாதார, சமூக, ஜனநாயகத்திற்கு எதிரான வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தின. இவை இந்தியாவில் பணவீக்கத்தை மறைமுகமாக பாதிக்கலாம் என்று கூறுகின்றனர்.
The post அரசு நிர்வாக கொள்கை முடிவுகளால் பாதிப்பு; டிரம்புக்கு எதிராக ‘50501’ போராட்டம்: மக்கள் வீதியில் இறங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.