சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். அதிகபட்சமாக, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்களும், சேலம் மண்டலத்தில் 486 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதேபோன்று, சென்னையில் 364 பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 362 பணியிடங்களும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை 344 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 322 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று, விழுப்புரம் மண்டலத்தில் 322 பேரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 364, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 88, வேலூர் – 50,காஞ்சிபுரம் – 106, கடலூர் – 41, திருவண்ணாமலை- 37, கும்பகோணம் -101, நாகப்பட்டிணம் – 136, திருச்சி – 176, காரைக்குடி – 185, புதுக்கோட்டை – 110, கரூர் – 48, சேலம்-382, தர்மபுரி- 104, கோவை-100, ஈரோடு – 119, ஊட்டி – 67, திருப்பூர் – 58, மதுரை – 190, திண்டுக்கல்- 60, விருதுநகர் – 72, நாகர்கோவில்- 129, தூத்துக்குடி கோட்டத்தில் 94 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தகுதி: 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.
செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 1.1.2025-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. எடை குறைந்தபட்சம் 50 கிலோகிராம். இப்பணியிடங்களுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் www.arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் நடத்துநர் நியமனம்; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.