சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான, ஆசிரியர்கள் நிரந்தர பணியிடங்களாக உருவாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களாக 2002ம் ஆண்டு தொகுப்பூதியம் அடிப்படையில் 1800 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 4,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இவர்கள், தற்போது 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமும், 5 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து செலவுக்காகவும் அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக உருவாக்க கோரி 723 சிறப்பு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி, சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர், தமிழக முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சிறப்பு குழந்தைகள் உள்ளனர். 10 குழந்தைகளுக்கு 1 ஆசிரியர்கள் என்ற விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 13 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் ஒரு பணியிடத்தை கூட உருவாக்காத மாநில அரசு 1800 பேரை சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துள்ளது. தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்து விடுப்பு உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. எனவே, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு ஏப்ரல் 21ம் தேதி பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
The post அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரமாக உருவாக்க கோரி 723 பேர் வழக்கு: ஒன்றிய, தமிழக அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.