காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அரை இறுதிப் போட்டியின் கூடுதல் எடை காரணமாக அவர், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்நிலையில், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக அவரை கவுரவிக்க ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்தது. ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகிய 3 வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர், விருப்பத்தின்படி அரசு நடந்துகொள்ளும் என்றும் முதல்வர் நயாப் சிங் நைனி அறிவித்தார்.