சென்னை: இன்று தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் சக்தி புயல் உருவாக உள்ளது. கோடை வெயிலின் சூட்டைத் தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி, நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்துள்ளது. கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாகவே குறைந்துள்ளது.
ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 99 டிகிரி வெயில் நிலவியது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த சிலதினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் அந்தமழை பரவுவதற்கான வாய்ப்புள்ளது. நேற்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.
மேலும், நேற்று மாலையில் வட தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இரவிலும் மழை பெய்தது. இதேநிலை 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா – வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (21ம் தேதி ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அடுத்த 12 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது’ என தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் சக்தி புயல்;
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் இரண்டு வளி மண்டல காற்று சுழற்சிகள் உருவாகி கடந்த சில நாட்களாக மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மழையை கொடுத்து வருகின்றன. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இன்று ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் வலுப்பெற்று 22ம் தேதியில் (நாளை) அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று 25 அல்லது 26ம் தேதியில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக கர்நாடகாவில் மேலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை; 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை;
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த 2 தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கோழிக்கோடு அருகே கொயிலாண்டியில் கடலில் மீன் பிடிக்க சென்ற ஹம்சா கோயா (65) என்பவர் படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று கண்ணூர் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், நாளை கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், 23ம் தேதி ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கும், 24ம் தேதி பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, லட்சத்தீவு கடற்பகுதியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த 4 நாட்களுக்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
The post அரபிக்கடலில் சக்தி புயல் உருவாகிறது; தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.