சென்னை: அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களிலும் வரும் 20ம் தேதிவரை மழை பெற்ற வாய்ப்புள்ளது.
சென்னையில் மாநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தில் 13 செ.மீ, நாலுமுக்கில் 12செ.மீ., காக்காச்சி 11 செ.மீ., மாஞ்சோலை 9 செ.மீ. மழை பெய்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.