பரந்தூர்: “திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இனிமேலும், உங்களுடைய நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 கிராமங்களிலிருந்து 5,100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து 910-வது நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.