மதுரை : அரிட்டாப்பட்டிக்கு நாளை செல்ல உள்ளதால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து போராடினார்கள். இதனையடுத்து இந்த திட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். சட்டப்பேரவையில் தீர்மானம், மக்களின் போராட்டத்தை தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நாளை நடைபெறுகிறது. அரிட்டாபட்டியில் நாளை நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்குமாறு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அரிட்டாபட்டி மக்கள் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அரிட்டாப்பட்டியில் நாளை நடக்கும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று போராட்டக் எதிர்ப்பு குழுவினரை சந்திக்க உள்ளார். நாளை குடியரசு தின விழா கொடியேற்றம் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் அரிட்டாபட்டிக்கு புறப்பட உள்ளார். இதனால் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார். அண்மையில் கூடிய சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post அரிட்டாப்பட்டிக்கு நாளை செல்ல உள்ளதால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார்!! appeared first on Dinakaran.