அரிய வகைத் தனிமங்களை (Rare Earth Elements [REEs]) உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. அரிய வகைத் தனிமங்கள் விநியோகத்தில் சுமார் 70%க்கும் மேல் சீனாதான் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சீனா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளதால், அரிய வகைத் தனிமங்களின் ஏற்றுமதியை அமெரிக்காவுக்கு சீனா நிறுத்தியுள்ளது.
சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் சீனா இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன்கள், பாதுகாப்பு / மருத்துவக் கருவிகள் தயாரிப்பதில் இத்தனிமங்கள் முக்கிய அங்கம் வகிப்பதால் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உள்படப் பிற உலக நாடுகள் அரிய வகைத் தனிமங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன.