அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அருப்புக்கோட்டை நகருக்கு, கோபாலபுரம் கிராமத்தில் தொடங்கி ராமசாமிபுரம் கிராமத்தில் முடிவடையும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு ரூ.154.98 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் 22 பெட்டிப்பாலங்களும், 10 சிறுபாலங்களும், 3 சாலை சந்திப்புகளும், மேலும் 1 ரயில்வே மேம்பாலம் மானாமதுரை – விருதுநகர் இரயில்வே வழித்தடத்தின் குறுக்கிலும் அமைக்கப்படுகிறது. தற்போது இப்புறவழிச்சாலையில் மொத்தம் உள்ள 22 பெட்டிப்பாலங்களும் 9 சிறுபாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 1 சிறுபாலத்தில் மேல்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பணிகளில் மொத்தமுள்ள 9.905 கி.மீ தூரத்தில் 7.50 கி.மீ சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் இருபுறமும் பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டை புறவழிச் சாலை பணிகள் மந்த கதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். அருப்புக்கோட்டையில் நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. நகரில் உள்ள திருச்சுழி ரோடு, மதுரை ரோடு, பந்தல்குடிரோடு என முக்கிய ரோடுகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி விடும் நேரங்களில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் போக்குவரத்து தெரிசலில் சிக்கி திணறுகின்றன.
இந்தப் புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் பட்சத்தில், அருப்புக்கோட்டை நகர் பகுதியினை தவிர்த்து, பந்தல்குடியிலிருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியிலிருந்து விருதுநகருக்கும், அதேபோல் அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் வாகன நெரிசல்கள் உள்ள நகர் பகுதிகளை தவிர்த்து மதுரை தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் இப்புறவழிச்சாலையில் சிரமமின்றி செல்லலாம். மேலும் அருப்புக்கோட்டை நகர்ப் பகுதியில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் புறவழிச் சாலைகளை பயன்படுத்தி மதுரை தூத்துக்குடி செல்லலாம். கல்லூரி வாகனங்களும் நகருக்குள் வராமல் புறவழிச் சாலையில் செல்ல வசதியாக இருக்கும்.
எனவே இதை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அருப்புக்கோட்டையில் மந்தகதியில் புறவழிச்சாலை பணிகள்: விரைந்து முடிந்து கோரிக்கை appeared first on Dinakaran.