தேனி: அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலே மாணவ, மாணவியர்களுக்கு கொண்டாட்டம் தான். விடுமுறை நாளை மகிழ்ச்சியாக கழிக்க மாணவ, மாணவியர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது வழக்கம். இதில் உறவினர் வீடுகளுக்கு வருவோர், அந்த பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கும் சென்று பொழுதுபோக்குவர். உறவினர் வீடுகளுக்கு செல்லாதவர்கள், மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்களை தேர்வு செய்து, அத்தகைய சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் சென்று குதூகலமடைவதும் வழக்கம்.
தமிழ்நாட்டில் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டங்களில் முதல் இரண்டு இடங்களை நீலகிரி மாவட்டமும், தேனி மாவட்டமும் பிடித்துள்ளன. இதில் கேரள மாநிலத்தின் எல்லை மாவட்டமாக மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 80 கிமீ தொலைவில் தேனி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மேகமலை, சுருளி அருவி, சின்னச்சுருளி அருவி, கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவி, நறுமனப்பொருள்கள் விளைச்சலுடன் இயற்கை அழகை அள்ளிக்கொடுக்கும் குரங்கனி, போடிமெட்டு, வெள்ளி மலை, வைகை அணை, சோத்துப்பாறை அணை என இயற்கை அழகை கொட்டிக்கொடுக்கும் சுற்றுலா தலங்கள் உள்ளன.
மேகமலை
மேகமலை கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கையான தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளையும் பல்வேறு வகையான பறவையினங்களையும் மேகமலையில் காணமுடியும். பச்சைப்போர்வையை போர்த்தியதுபோல மேகமலை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். அவ்வப்போது வழிமறிக்கும் யானைகள் புல்லரிக்கச் செய்யும். முன்செல்லும் வாகனங்கள் தெரியாத வகையில் மேகக் கூட்டங்கள் சாலைகளில் படர்ந்து கொள்வது கண்கொள்ளா காட்சியாகும். மேகமலையில் திமுக ஆட்சியின்போது கோடைவிழா நடத்திய பெருமை உண்டு.
சுருளி அருவி:
மேகமலை பகுதியில் இருந்து வரும் ஓடைகளின் மூலமாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுமார் 150 அடி உயரத்தில் இருந்து இரண்டு அடுக்குகளாக தண்ணீர் விழுவதும், எங்குபார்த்தாலும் குரங்குகளின் கூட்டமும் சிறுவர்களை குதூகலமடையச் செய்து வருகிறது. இதேபோல வருசநாடு மலைப்பகுதியில் சின்னச்சுருளி அமைந்துள்ளது. வெள்ளி மலை, வருசநாடு மலைப்பகுதிகளுக்கு வருபவர்கள் சின்னச்சுருளி செல்வதை மறப்பதில்லை. அதேபோன்று, பெரியகுளம் நகரில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இங்கு பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.
குரங்கனி-போடிமெட்டு
போடியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் குரங்கனி உள்ளது. இங்கு விளையும் நறுமன விளைச்சலும், குரங்கனியில் பாய்தோடும் கொட்டக்குடி ஆறும், ஓங்கி உயர்ந்த மரங்களும் குரங்கனியை சுற்றுலா பயணிகளின் நினைவை விட்டு நீங்குவதில்லை. குரங்கனிக்கு மேல்பகுதியான போடி மெட்டு செல்லும் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைச்சாலை புதிய அனுபவத்தை தருவதாக உள்ளது.
மூணாறு
கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும், பழைய பெரியகுளம் தாலுகாவின் ஒரு பகுதியான மூணாறு தேனியில் இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள், ஏலம், மிளகு, கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பயிர்கள் விளையும் பூமியான மூணாறில் சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இங்கு காணப்படும் வரையாடுகள் சிறப்பானவை.
தேக்கடி
கேரள மாநிலம் என்றாலும், தமிழக எல்லைநகரான குமுளியில் இருந்து 4 கிமீ தொலையில் தேக்கடி அமைந்துள்ளது. தேக்கடியில் அமைந்துள்ள பெரியாறு அணையும், அணைப்பகுதியில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்களையும் வன விலங்குகளையும் படகு சவாரி சென்று பார்க்க வசதியாக படகு சவாரி உள்ளதால் தேக்கடி செல்லும் சுற்றுலா பயணிகள் படாகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
வைகை அணை
தேனியில் இருந்து 18 கிமீ தொலைவில் வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர்ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் வைகை அணை உள்ளது. இங்குள்ள சிறுவர் பூங்காவானது, ஆறு வயது முதல் 60 வயது வரையிலான அனைவரையும் ஈர்க்கும் வகையில் வடகரை, தென்கரை என இரு பூங்காக்கள் சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருகிறது.
சோத்துப்பாறை அணை
பெரியகுளம் நகரில் இருந்து 9 கிமீ தொலைவில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. மொத்தம் 126 அடி கொண்ட இந்த நீர்த்தேக்கத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் அமைந்துள்ள மாந்தோட்டங்களானது புதிய அனுபவத்தை தருவதாக உள்ளது.இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் ஒருபுறமிருந்தாலும், ஆன்மீகத் தலமான சனீஸ்வர பகவான் சிறப்பு ஸ்தலான குச்சனூர் சனீஸ்வரர் கோயில், ராகு, கேது தளமான உத்தமபாளையம் ஞானம்மன் திருக்கோயில், பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், மஞ்சளாறு அணை அருகே உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணிசுவாமி கோயில், பெரியகுளம் கைலாசநாதர் கோயில் ஆகிய ஆன்மீக தலங்கள் உள்ளன.
சிறப்பு பேருந்துகள் தேவை:
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேனி வரும் சுற்றுலாப் பயணிகள், தேனியை சுற்றியுள்ள இப்பகுதிகளை காண தேனியில் இருந்து தனியாக சுற்றுலா வாகனங்கள் இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலங்களை கொண்ட தேனி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை மூலமாக சிறப்பு வாகனங்கள் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனியில் இருந்து குரங்கனி, போடிமெட்டு, மூணாறு சென்றுவர ஒரு சிறப்பு வாகனமும், வைகை அணை, சோத்துப்பாறை, சுருளிஅருவி, தேக்கடி சென்று வர தனியாக ஒரு சிறப்பு வாகனமும், வைகை அணை, சோத்துப்பாறை, கும்பக்கரை சென்று வர தனியாக ஒரு சிறப்பு வாகனமும், சுற்றுலாத் துறை மூலம் குறைந்த பட்ச கட்டணத்தில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். சுற்றுலாத் துறை மூலம் இல்லாவிட்டாலும், சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் நாள்தோறும் இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post அரையாண்டு விடுமுறை விட்டாச்சு…! சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.