துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியனான முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். இது நிகழ்ந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டிருந்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசியாக இரு அணிகளும் கடந்த 2017-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றிருந்தது.