ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு குறித்த பாடங்களைத் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி) நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முகலாயர் ஆட்சி தொடர்பான பாடங்களை, 12ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்களிலிருந்து என்சிஇஆர்டி சமீபத்தில் நீக்கியது. தற்போது அறிவியலின் அடிப்படை அம்சங்கள்மீதும் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.
1859இல் டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ (On the Origin of Species) புத்தகம் வெளியானபோது, பிரிட்டனில் மத அடிப்படைவாதிகள் அதிர்ச்சியடைந்தனர். இன்றைக்கும் பல்வேறு நாடுகளில் மத அடிப்படைவாதிகள் இக்கோட்பாட்டை ஏற்க மறுக்கின்றனர். எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளில் டார்வின் கோட்பாடு தவறானது என்றே பாடப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.