கோவை: கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் பிரதான நகரப் பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. பல தனியார் பேருந்துகள் விதிகளை மீறி இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பேருந்து பயணிகள் கூறியதாவது: மாநகரில் தனியார் நகரப் பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது போல், பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அதிவேகமாக பேருந்துகளை ஓட்டுவது, தடையை மீறி அதிக சப்தத்தை ஏற்படுத்தும் ‘ஏர் ஹாரன்’ பயன்படுத்துவது, நடத்துநர் அல்லாத நபர்கள், படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிகளை ஏற்றி, இறக்கும் செயல்களில் ஈடுபடுவது, ஓட்டுநர், நடத்துநர்கள் சீருடை அணியாமல் பயணிப்பது, பேருந்துகளில் பாடல்களை அதிக சப்தத்தில் இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் வைப்பது போன்ற விதிமீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.