சென்னை: அழகர்கோயில், மருதமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமானது ஸ்ரீரங்கம் – ரங்கநாத சுவாமி கோயில், பழனி – தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றபின், கடந்த 2021-ம் ஆண்டு திருச்செந்தூர் – சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் – மாரியம்மன் கோயில், திருத்தணி – சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும், 2022-ம் ஆண்டு ராமேசுவரம் – ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை – அருணாச்சலேசுவரர் கோயில், மதுரை – மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களிலும், இந்த ஆண்டு ஜனவரியில் பெரியபாளையம் பவானியம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஆனைமலை மாசாணியம்மன் ஆகிய 3 கோயில்கள் என கூடுதலாக 9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.