காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஏகாம்பரநாதர் கோயில். இந்த கோயில் பண்டைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் மண் ஸ்தலம் ஆகும். தற்போது, தைப்பூசத்துக்காக மேல்மருவத்தூர் வரும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் என பலரும் வருவதால் ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. ஏகாம்பரநாதரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில்தான், கோயிலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரவுடிகள் சிலர் கோயில் ஊழியர்கள்போல் உள்ளே நுழைந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகையை ஒழங்குபடுத்துவதுபோல் அவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். பக்தர்களும் இவர்களை கோயில் ஊழியர்கள் என்றே நினைக்கின்றனர். இடையில் இவர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் தனியே உள்ளே அழைத்துச் செல்கின்றனர். இதுகுறித்து அங்கு யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் நொந்து ஏகாம் பரநாதரை தரிசிக்க வேண்டிய சூழல் உள்ளது.