சென்னை: “என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள். தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்” என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்புடன் பதில் அளித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்தார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனையில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துகொள்ளவில்லை.