புளோரிடா: ‘இந்தியாவே அதிக வரி போட்டு, அதிக பணம் வைத்துள்ளார்கள். அவர்கள் நாட்டில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் ரூ.180 கோடி நிதி உதவி தர வேண்டும்?’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி கேட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவுகளை குறைக்க, உலக பணக்காரர் எலான் மஸ்க் தலைமையில் அரசின் செயல்திறன் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.180 கோடி நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்தது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து புளோரிடாவில் நேற்று பேட்டி அளித்த அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். பிரதமர் மோடியிடமும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் ரூ.180 கோடி நிதி உதவி தர வேண்டும். அவர்களே நிறைய பணம் வைத்துள்ளார்கள். எங்களைப் பொறுத்த வரை, உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அவர்களின் வரி அதிகமாக இருப்பதால், அமெரிக்க பொருட்கள் அந்நாட்டில் நுழையவே முடியாமல் உள்ளது’’ என்றார்.இதற்கிடையே, பெற்றோர் உதவியின்றி தனியாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய குழந்தைகள், சிறுவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்டு வந்த சட்ட உதவியை டிரம்ப் நிர்வாகம் நேற்று நிறுத்தி உள்ளது. இந்த சட்ட உதவி 26,000 புலம்பெயர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
* இந்தியாவில் டெஸ்லா அதிபர் டிரம்ப் எதிர்ப்பு
எலான் மஸ்குடன் அதிபர் டிரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘பிரதமர் மோடி நேற்று இங்கு வந்திருந்தார். அவரிடம் பரஸ்பர வரி விதிப்பு குறித்து கூறினேன். நீங்கள் எவ்வளவு வரி விதிக்கிறீர்களோ அதே அளவு வரியை உங்கள் மீது விதிப்பேன் என்றேன். அதற்கு மோடி இல்லை, இல்லை அதை விரும்பவில்லை என்றார். இந்த விஷயத்தில் என்னுடன் யாராலும் விவாதம் செய்ய முடியாது. இந்தியா எங்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. 100 சதவீதம் வரி விதிக்கிறார்கள். அமெரிக்க கார், பைக்குகளை இந்தியாவில் விற்க முடியாது. எலான் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை திறக்கலாம். ஆனால் எங்களுக்கு மிகவும் நியாயமற்றது’’ என்றார்.
The post அவர்களே நிறைய பணம் வைத்துள்ளனர் அதிக வரி போடும் இந்தியாவுக்கு ஏன் ரூ.180 கோடி தர வேண்டும்?அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி appeared first on Dinakaran.