கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் ஏதோ விடுமுறையைக் கழிக்க இங்கு வந்துள்ளது போலவே ஆடுகின்றனர் என்று விரேந்திர சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேக்ஸ்வெல் படுமோசமாக ஆடி வருவதால் அவரது ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கே அவரை உட்கார வைக்க வேண்டியதாயிற்று. வெறும் 41 ரன்களை 5 போட்டிகளில் எடுத்துள்ளார் மேக்ஸ்வெல். கடந்த ஐபிஎல் சீசனிலும் ஆர்சிபி அணிக்காக ஆடி சொதப்பலோ சொதப்பல் என்று கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்து வரும் விரேந்திர சேவாக், இந்த முறை கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன் போன்றோர் இங்கு விடுமுறையைக் கழிக்க வருகின்றனர் என்று சாடியுள்ளார்.