மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இது திட்டமிட்ட சதியா என்று போலீஸார் விசாரிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், மாநில மக்களை அமைதி காக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஷிண்டே, “நாக்பூரில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதில் ஏதாவது திட்டமிட்ட சதி உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் நான்கு டிசிபி அளவிலான அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். சூழலை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். பலர் வெளியே இருந்து வந்தவர்கள் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். பெட்ரோல் குண்டுகள் கூட வீசப்பட்டுள்ளன. போலீஸாரும் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அமைதியாக இருக்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன்.