மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமாதியை இடித்து அகற்றுபவர்களுக்கு ரூ.21 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவர் தினேஷ் பல்ஹரி அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் அவரங்கசீப் சமாதியை அகற்ற வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு நேற்றுமுன்தினம் அழைப்பு விடுத்திருந்தன. இதில் வன்முறை வெடித்தது. இருப்பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.