துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் உள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்று 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 28-ம் தேதி நடைபெறுகிறது. தொடரின் அனைத்து ஆட்டங்களும் துபாய், அபுதாபியில் நடத்தப்படுகிறது.