சென்னை: “நீர்நிலைகளை காக்கும் வகையில், ‘நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கவுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் நதிகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும்” என நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படைத் தேவையான நீர்வளங்கள் தமிழகத்தில் இன்று நிலைகுலைந்து கிடக்கின்றன. பழம்பெருமை வாய்ந்த நமது ஆறுகள் தற்போது, கழிவுநீரால் சூழப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இந்த நிலை இப்படியே தொடருமானால் நமது வருங்கால தலைமுறையினருக்கு ஆறு, ஏரி, குளம் ஆகியவை எல்லாம் காணக் கிடைக்காத அதிசயப் பொருளாகிவிடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடமும் ஆளும் அரசிடமும் எடுத்துக் கூறும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.