கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டனான வெங்கடேஷ் ஐயர் கூறும்போது, “சேப்பாக்கம் ஆடுகளத்தில் அதிக அளவிலான சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்த சீசனிலும் சரி, கடந்த சீசனிலும் சரி வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். கடந்த சீசன் இறுதிப் போட்டியில் முதல் 5 விக்கெட்களை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் கைப்பற்றினர்.
ஆடுகளம் எந்த வகையில் சாதகமாக இருக்கிறது என்பது குறித்து நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. போட்டியின் சூழ்நிலைக்கு நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்கிறோம், அதுதான் தொழில்முறை விளையாட்டு. ஒரு அணி சாம்பியனாக இருக்க வேண்டும் என்றால், எல்லா நிலைமைகளிலும், சிறப்பாக செயல்படக்கூடிய கலவையை கொண்டிருக்க வேண்டும். இதை புரிந்து கொண்டே நாங்கள் செயல்படுகிறோம்.