சென்னை உள்ளிட்ட நகரங்களில் அத்தியாவசிய போக்குவரத்து வசதியாக இருந்து வரும் ஆட்டோக்களின் கட்டணம் குறித்த சர்ச்சை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அரசு சார்பில் அவ்வப்போது குறைந்தபட்ச கட்டணம் மற்றும் கி.மீட்டருக்கான கட்டணம் நிர்ணயிப்பதும், அதையும் மீறி பிரச்சினைகள் எழுவதும் தொடர்கதையாக உள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை மனதில் கொண்டு புதிய கட்டணத்தை வரையறுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் இருந்து வருகிறது.
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு 8 முதல் 10 ஆயிரம் புதிய ஆட்டோக்கள் இந்த எண்ணிக்கையுடன் இணைந்து வருகின்றன. மொத்த ஆட்டோக்களில் 70 சதவீதம் சொந்த ஆட்டோக்களாகவும், 30 சதவீதம் வாடகை ஆட்டோக்களாகவும் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் நாள் ஒன்றுக்கு தலா 2,000 ரூபாய் சம்பாதிக்கும் நிலை இருந்தது. சமீபகாலமாக இந்த தொகையைக்கூட சம்பாதிக்க முடியவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் புலம்பும் நிலையே உள்ளது. ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் அவர்களது ‘ஆப்’ மூலம் கட்டணத்தை நிர்ணயிப்பதால், பொதுமக்கள் அந்த ஆட்டோக்களை வாடகைக்கு எடுக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒரு கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு மீதத்தை தருவதால் கட்டுபடியாகவில்லை என்ற புலம்பலும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நிலவுகிறது. இதுபோக, பைக் டாக்சி வருகையும் ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாயை மேலும் பதம் பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆட்டோ கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் அவர்கள் சேவை அளிப்பதால், ஆட்டோவில் செல்லும் வாடிக்கையாளர்கள் பைக் டாக்சி மூலம் செல்வதையே விரும்புகின்றனர்.