கல்வி நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பயணங்களின்போது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை பெண்களும் குழந்தைகளும் சந்தித்து வருகின்றனர். அவர்களை எதிர்பாராத துன்பங்களில் இருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளும், காவல்துறையும், மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறைந்தபாடில்லை.
பெண் காவலர் மீதே நடைபெறும் தாக்குதல்கள், கல்வி நிலையங்களில் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை என இன்னல்கள் தொடர்கின்றன. அவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக பெண்கள் பயணம் செய்யும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் ஓட்டுநர் இருக்கையின் பின்பகுதியில் ‘க்யூஆர் கோடு’ ஒட்டும் நடைமுறையை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய முறையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளது மகளிர் பாதுகாப்பில் புதிய மைல்கல்லாகும்.