திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தகுதியுள்ள இன்னும் பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சரும் உத்தரவாதம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஆண்கள் பெயரிலும், அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விதிகளுக்குப் புறம்பாக மகளிர் உரிமைத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 1 கோடியே 14 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. அதேசமயம் இதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 57 லட்சம் பேரது மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. அப்படி முறையீடு செய்தவர்களுக்கு இதுவரை உரிமைத் தொகை கிடைத்தபாடில்லை.