திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டுக்கு உட்பட்ட பர்மா நகரில் ரயில்வேக்கு சொந்தமான மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. மழைக்காலத்தின்போது மழை நீர் தேங்குவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதுடன் மழை நீரும் சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோடை காலத்திலும் இந்த குளம் நீர் வற்றாமல் இருப்பதால் கால்நடைகளுக்கு பயன்படுகிறது. இந்தநிலையில் குளத்தை சரியாக பராமரிக்காததால் ஆகாயத் தாமரைகள் வளர்ந்து சேறும் சகதியாக மாறியதுடன் கடும் துர்நாற்றம் வீசியதால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கவேண்டும் என்று வார்டு கவுன்சிலர் தம்பியா என்ற தமிழரசன் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து ஹேன்ட் இன் ஹேன்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் சுமார் 900 மீட்டர் நீளம் 300 மீட்டர் அகலம் கொண்ட குளத்தை கடந்த சில தினங்களாக தூர்வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி பாதுகாப்பாக கரை அமைத்துள்ளனர். இதன் மூலம் குளம் அழகுற காட்சியளிக்கிறது.
‘’ரயில்வே துறைக்கு சொந்தமான குளத்தை சென்னை மாநகராட்சி கையகப்படுத்தி நடைபாதைகளுடன் சிறுவர் பூங்கா, இருக்கைகள், அலங்கார மின்விளக்கு மற்றும் படகு சவாரி அமைத்து சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும்’’ என்று மக்கள் கூறுகின்றனர்.
The post ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் பர்மாநகரில் ரயில்வே குளத்தை சுற்றுலாதலமாக மாற்றவேண்டும் appeared first on Dinakaran.