சென்னை: சென்னை அடுத்த உள்ளகரம். ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நியூபிரின்ஸ் பவானி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் 2 நாள் அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. நியூ பிரின்ஸ் கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் கே.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் வி.எஸ்.மகாலட்சுமி, துணை தலைவர்கள் எல்.நவீன்பிரசாத், எல்.அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர்கள் கே.அமுதா, ஜெ.ஜெயந்தி ஆகியோர் வரவேற்றனர். விழாவில். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ராமகிருண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் ₹1 லட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ”கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் படைப்புகள், சமூகத்தின் இன்றியமையாத தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. இதுபோன்ற படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். நமது அரசின் நோக்கம் மாணவர்களை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களாக இல்லாமல், புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நிலைக்கு உயர்த்தவேண்டும் என்ற உன்னத நோக்கோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக நிதி வழங்கி, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பல நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
இவற்றை மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெறவேண்டும்” என்றார். இதில், மாநகராட்சி மண்டல தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர் பூங்கொடி ஜெகதீஸ்வரன், ப.குணாளன், ஜெக தீஸ்வரன், எ.வேலவன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுதா பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.