சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்கேற்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ மெயின்) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இன மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவும். மேலும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக்கல்லூரியில் தங்கி பயிலவும் உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையையும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்று உள்ளார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் அகில இந்திய நுழைவுத்தேர்வில் பங்கேற்க பயிற்சி: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.