ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியானார்கள். இதில் 12 பேர் காயம் அடைந்தனர்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டிகுத்தேம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள மருந்து உற்பத்தி மையத்தின் 4வது அலகில்தான் இந்த விபத்து ஏற்பட்டது.
பரபரப்பு பின்னணி!
விபத்து அங்கு தீ விபத்து ஏற்பட்ட போது இரவு நேரத்தில் மொத்தம் 18 பேர் பணியாற்றி வந்துள்ளனர். நேற்று இரவு அங்கு கேஸ் கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து
4 தீயணைப்பு வாகனங்கள் வந்து அங்கு தீயை அணைக்க கடுமையாக போராடின. சரியாக 2.30 மணி நேர போராட்டத்திற்கு பின் அங்கு தீ ஒரு வழியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பேர் உள்ளேயே நெருப்பில் பொசுங்கி பலியானார்கள். ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார். இதில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மரணம்
இவர்களுக்கு உடலில் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பலியான 6 பேரில் 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள். பீகாரில் இருந்து ஆந்திராவில் குடியேறி இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். உடுருபதி கிருஷ்ணய்யா, பி கிரண் குமார், காரு ரவிதாஸ், மனோஜ் குமார், சுவாஸ் ரவிதாஸ் மற்றும் ஹப்தாஸ் ரவிதாஸ் ஆகியோர் பலியானார்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிவாரணம்
இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம், லேசாக காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.