*விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை
பொள்ளாச்சி : ஆனைமலை உட்கோட்ட பகுதியில் நான்கு வழிச்சாலையை உறுதிப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரம் வழியாக பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாக கோவை ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, மீன்கரை ரோடு, பாலக்காடு ரோடு, கோட்டூர் ரோடு உள்ளிட்டவை அடங்கியுள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த நெடுஞ்சாலைகளில் பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, மீன்கரை ரோடு உள்ளிட்டவை சுமார் 5 ஆண்டுக்கு முன்பு, நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, குறுகலான பாதை மற்றும் போக்குவரத்து மிகுந்த இடம் உள்ளிட்டவை கணக்கிட்டு, அப்பகுதியில் முதற்கட்டமாக அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும், பல்வேறு இடங்களில் சென்டர் மீடியனும் அமைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பாலக்காடு ரோடு நான்கு வழிச்சாலையாக முழுமையானதையடுத்து, மீன்கரை ரோடு, பல்லடம் ரோடு விரிவாக்க பணி துரிதப்படுத்தப்பட்டது.
இதில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் ஆனைமலை உட்கோட்டத்தில், அவிநாசியில் இருந்து, பொள்ளாச்சி பல்லடம் ரோடு வழியாக தமிழக, கேரள எல்லையான மீன்கரை வரை சென்றடையும் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்றது.
அன்மையில் இரண்டாம் கட்ட பணி நடைபெற்றது. ஆனைமலை உட்கோட்டமான மீன்கரை ரோடு திவான்சாபுதூர் முதல் கணபதி பாளையம் வரையிலும் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட பகுதியை, உறுதிப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நேற்று, கோவை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரோட்டின் அளவு குறித்து நவீன கருவி கொண்டு அளவீடு செய்தார். அப்போது, சாலையின் தரம், எத்தனை ஆண்டுகள் தார் ரோடு தரமாக இருக்கும் என கேட்டறிந்தனர்.
மேலும், மீன்கரை ரோடு நான்கு வழிசாலை பணி ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதனையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர் இந்த ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆனைமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆனைமலை உட்கோட்டத்தில் அவினாசியில் இருந்து துவங்கி பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலம் எல்லையான கணபதிபாளையம் வரை செல்லும், திருப்பூர் பல்லடம் ரோடு மற்றும் கொச்சின் சாலை மீன்கரை ரோடு வழியாக கனரக வாகனங்களில் பல்வேறு வகையான சரக்கு பொருட்கள் எடுத்து செல்லும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது.
இந்த சாலையில் போக்குவரத்து சீராக செல்ல மீனாட்சிபுரம் ரயில்வே கேட் முதல் க ணபதிபாளையம் வரை முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக விரிவாக்க பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது இந்த பகுதியில் உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் விரைவில் முழுமையடையும் நிலையில் உள்ளது’’ என தெரிவித்தனர்.
The post ஆனைமலை உட்கோட்ட பகுதியில் நான்கு வழிச்சாலையை உறுதிப்படுத்தும் பணிகள்; அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.